Share via:
கடந்த மூன்று தலைமுறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் விஜயதாரணி
இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் அதிகாரபூர்வமாக பா.ஜ.க.வில்
இணைந்துவிட்டார். கடந்த ஒரு மாதம் நடந்துவந்த இழுபறிக்கு முடிவு கிடைத்துவிட்டது.
கட்சி மாறியதற்கு காரணம் கேட்டபோது, “பிரதமர் மோடியின் தலைமையில்
சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல்
பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று கூறினாலும் விஜய் வசந்த் மீது இருந்த கோபத்தாலே
கட்சி மாறியதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி
கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதியில்
எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலிலும் அவருக்கே சீட் கொடுக்கப்படும் என்று
தெரிகிறது.
கடந்த 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற
விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பி மேலிடத்தில்
கேட்டாராம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. அதனாலே பா.ஜ.க.வில்
இணைந்து கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் தலைவர் பொறுப்புக்கு வரும் ஆசையில் மண் விழுந்ததும் கட்சி
மாறியதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, “விஜயதரணிக்கு
கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும்
வாழ்க” என்று கூறியிருக்கிறார்.
அண்ணாமலை பாதயாத்திரைக்கு பிரதமர் வரும் நேரத்தில் விஜயதாரணி வருவார்
என்று எதிர்பார்க்கப்பட்டதும் நடக்கவில்லை. ஆனாலும் அண்ணாமலை, ‘’விளவங்கோடு தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவின் இணைந்துள்ளார். அவரை வரவேற்பதோடு,
அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’
என்று வரவேற்பு கொடுத்துள்ளார்.