Share via:
தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியதற்கு நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்.
இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். நீதிபதியின் மனைவி இறங்கிவந்து
ஜாமீனுக்கு ஆதரவு கொடுத்தார். இந்த நிலையில், கஸ்தூரி போன்று தேவேந்திர குல வேளாளர்
மக்களை தோழர் ஓவியா அவமதிப்பு செய்திருக்கிறார். அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க
வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கொந்தளிக்கிறார்கள்.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் என்றால்
முறை தவறி பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தோழர்
ஓவியா பேசியது பெரும் வைரலானது. இதற்கு பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவர் நாராயணன்,
‘’தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது
செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர்,
எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்?
மிக கேவலமாக அச்சமுதாய மக்களின் பிறப்பு குறித்து பேசியும் இது
வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் சிவில் உரிமைகள்
பாதுகாப்பு சட்டத்தின் (PCR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கு மக்கள் மீது
உள்ள அன்பும், பாசமும் ஏன் தமிழர்கள் மீது அதுவும் பட்டியலினத்தவர் மீது இல்லை?’’ என்று
கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஜான் பாண்டியனும்,
‘’தேவேந்திர குல வேளாளர் மக்களை பொது மேடையில் இழிவாக பேசிய தோழர் ஓவியா அவர்கள் மன்னிப்பு
கேட்க வேண்டும் உலகில் நெல் நாகரிகத்தை கற்று கொடுத்த வரலாற்று பெரும்பான்மை சமூகமான
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை இழிவான வார்த்தைகளால் பேசிய திருமதி . ஓவியா வள்ளிநாயகம்
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். பெரும்பான்மையான மக்களின் தேவை என்ன கோரிக்கை என்ன
என்று உணர முடியாதவர்கள் அற்ப அடையாள அரசியலுக்காக பேசுவது சமூகத்தில் கலவரத்தை தூண்டும்
விதமாக உள்ளது. எனவே அவரை தமிழக காவல் துறை கைது செய்ய வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.
அதேநேரம் ஓவியாவின் ஆதரவாளர்கள், ‘’புராணங்களில் இதை விட கேவலமாக
குறிப்பிடப்பட்டுள்ளது. ’’பார்வதிக்கு வியர்க்கிறது.வியர்வையைத் துடைத்துப் பார்வதி
கீழே எறிகிறார்.அவ்வியர்வை குளத்திலுள்ள வல்லக் கொடியில் விழுந்து விட அங்கு ஒரு குழந்தை
தோன்றுகிறது . அதை பார்வதியும் , பரமசிவனும் எடுத்து கழியன் என்று பெயர் சூட்டுகின்றனர்.அந்த
கழியனின் வழி வந்தவர்களே தேவேந்திர குல வேளாளர் என்று புராணம் குறிப்பிடுகிறது. முதலில்
இதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்’’ என்கிறார்கள்.