Share via:
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும் மாவட்டச்
செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கிறது. குறிப்பிட்ட மாவட்டத்தில்
இவர்கள் தான் சகல அதிகாரத்துடன் திகழ்வார்கள். தங்களுக்குக் கீழ் இருக்கும் சகல நிர்வாகிகளுக்கும்
பொறுப்பு வாங்கிக்கொடுத்து, அதில் வசூல் செய்து, அவர்களுக்கும் கட்சிக்கும் செலவழிப்பார்கள்.
முக்கியக் கட்சிகளில் எல்லாம் ஒவ்வொரு வருவாய்
மாவட்டத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவது
வழக்கம். ஆனால், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது ஒவ்வொரு சட்டமன்றத்
தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என 234 பேர் நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு
கொடுத்திருக்கிறார்.
இது குறித்து திருமாவளவன் இன்று, ‘’தமிழ்நாடு
முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட
நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்கள்
உள்ளிட்ட மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது.
இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர்களை தலைமைக்கு பரிந்துரை
செய்வார்கள். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில் ஒருவர் ஒரு பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்தக்குழு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் (38) மாவட்டத்திற்கும் ஒரு குழு அமைக்கப்படும். √ 234 மாவட்டச் செயலாளர்கள் மற்றும்
மாவட்ட நிர்வாகம் முழுமையாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய – நகர பொறுப்பாளர்களுக்கான
பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும். 234 மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்ட
பிறகு, நகர- ஒன்றிய நிர்வாகம் முழுமையாக அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மாநில நிர்வாக
பொறுப்புகள் அறிவிக்கப்படும்.’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கையைப் பார்க்கும் அரசியல் ஆய்வாளர்கள்,
‘’திருமாவளவன் கூட்டணி மாறும் எண்ணத்தில் இருப்பதாலே கட்சியை இந்த வகையில் பலப்படுத்தும்
முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு
மாவட்டச் செயலாளர் என்பது தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பணம் வசூல் செய்வதற்கும் பெரிய
அளவுக்குப் பயனளிக்கும். திருமாவளவன் ஏதோ ஒரு திட்டத்தில் இருக்கிறார்’ என்று உறுதிபடச்
சொல்கிறார்கள்.