Share via:
நீட் தேர்வுகளில் நடக்கும் குழப்பங்களும் தில்லுமுல்லுகளும் அம்பலமானதை
அடுத்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து
ஸ்டாலினும் தேசிய அளவில் ராகுல் காந்தியும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு
அளிக்கவும், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும்,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான
சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும்,
இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள்,
நீட் தேர்வுக்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும்
இந்தத் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத்
தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், ’தமிழ்நாடு
சட்டப்பேரவையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிப்பதற்கான
சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதுடன், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக்
கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களையும் மேற்கொள்ள
வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை இந்த கடிதத்துடன்
இணைத்து அனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்
நீட் விவகாரத்தில் கடுமையான போக்கினை கையாளத் தொடங்கியிருக்கிறார். இது குறித்து ராகுல்
காந்தி, “நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள்
ஒரு பேரழிவு. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் பலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது
அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் கனவுகளும் இலக்குகளும்
அழிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நாள் செலவிட வேண்டும் என்று (நாடாளுமன்றத்தில் விவாதிக்க
வேண்டும் என்று) வலியுறுத்தி உள்ளேன். இணக்கமான முறையிலும், அமைதியான முறையிலும் இது
குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளன.
7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. இதன் காரணமாக
2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும், இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில்
நான் எழுப்பியபோது, பேச அனுமதிக்கவில்லை. வினாத்தாள் கசிவு என்பது திட்டமிட்ட முறையில்
நடக்கக்கூடிய ஒன்று. இது ஒரு மிகப் பெரிய ஊழல். இந்த விவகாரம் இப்படியே தொடருவதை அனுமதிக்க
முடியாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டாக வேண்டும். விவாதத்துக்கு தலைமை தாங்க
வேண்டிய பிரதமர், விவாதத்தை விரும்பாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது…’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் இந்தியா முழுக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
பல மாநில அரசுகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆகவே, நீட் தேர்வுக்கு
விலக்கு அளிப்பதற்கு முழு மூச்சாகப் போராட தமிழக எம்.பி.க்கள் உறுதி எடுத்திருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்துவந்த நிலையில், இன்று இந்தியா
முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆகவே, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.