Share via:
மேற்குவங்காளம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெண்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அளவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி கிடையாது. பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் மீண்டும் தங்களின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை தற்போது சி.ஐ.எஸ்.எப் வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.