Share via:
சென்னை வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் கிறிஸ்தமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இயேசுபிரான் அவதரித்த தினமான இன்று கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும், கேக் உள்ளிட்ட இனிப்பு பொருட்களை பரிமாறிக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடசென்னையில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்று அங்கிருந்த முதியவர்களை சந்தித்து பேசினார். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்கிற தே.மு.தி.க.வின் கொள்கை முழக்கத்தின் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின் போது தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேக் வெட்டியும், முதியவர்களுடன் ஒன்றாக உணவருந்தி கொண்டாடினார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் இளங்கோவன், கழக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.