Share via:
கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது பகுதி பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பொது மக்கள் அளித்த மனுக்களை ஏற்றுக் கொண்ட வகையில் அதற்கான ஒப்புகை சீட்டுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களிடம் நேரடியாக வழங்கினார். அதன்பின்னர் 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், அந்தியூர் செல்வராஜ், சண்முகசுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உடன் இருந்தனர். மேலும் முதல்வரின் முகவரி திட்ட அலுவலர் ஷில்பா பிரபாகர், மக்களுடன் முதல்வர் சிறப்புப் பணி அலுவலர் ப.மதுசூதனன் ரெட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.