Share via:
சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து எழும் புகார்களின் அடிப்படையில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் தொலைபேசியில் உரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொது மக்களுக்கு தேவையான உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைகளை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு அதை சரி செய்ய வேண்டும் என்றும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுடன் தொலைபேசியில் உரையாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது