Share via:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ அளவுக்கு தங்கம் கடத்தல் நடந்திருக்கும் சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளின் தலையை சுற்றவைத்துள்ளது.
பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தும் கடத்தல் கும்பல் பல்வேறு யோசனைகளை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ரூ.167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் கிடைத்த நிலையில், சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான சபீர் அலியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர் சென்னை விமான நிலையத்தில் சொந்தமாக கடை ஒன்றை நடத்தி வந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய புறப்பாட்டு பகுதியில் சபீர் நடத்தி வரும் கடையை வெளிநாட்டில் இருந்து வரும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கடையில் உள்ள கழிவறையை பயன்படுத்திவிட்டு அங்கு தங்கத்தை வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த தங்கத்தை கடத்தல்காரர்கள் ஒப்படைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் கடையின் ஊழியர்கள். இதன்படி கடந்த 2 மாதங்களில் 267 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.167 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு சபீர் அலி கமிஷனாக பெற்றுள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சபீர் அலியின் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அடையாள அட்டையை பயன்படுத்தியதால் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து சோதனையில் இருந்து தப்பி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து யூடியூபர் சபீர் அலி, 7 ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அடையாள அட்டையை பறிமுதல் செய்ததோடு இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.