Share via:
சென்னை போலீஸ் ஷ்பெஷல் குட்கா ரெய்டு… எட்டே நாளில் 63 பேரை தூக்கிட்டாங்க
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, மாவா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சீரியஸ் உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ எனும் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 10ம் தேதி முதல் 17 வரையிலான 8 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விரட்டி விரட்டி பிடித்தனர். புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தொடர்பாக 47 வழக்குகள் கைது செய்யப்பட்டு 63 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்படி கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1,788 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களும், 63.47 கிலோ கிராம் மாவா, 2 செல்போன்கள் , பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, லாரி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
17ம் தேதி அதிகாலை எம்.3 புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிடங்கில் கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வாகனங்களில் கடத்திவந்த குட்கா புகையிலை பாக்கெட்டுகளை இறக்கிக்கொண்டிருந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டு 1,511.6 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், ஆட்டோ மற்றும் இலகுரக சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களைக் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டபப்டி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து நிறைய குட்கா ஆட்கள் எஸ்கேப் ஆகிறார்களாம்.