Share via:
போதைக்கு கஞ்சா மட்டுமின்றி வலி நிவாரண மாத்திரைகளையும் பயன்படுத்தத்
தொடங்கியிருக்கிறார்கள். அனைத்து வகையிலான கஞ்சா மற்றும் போதை குற்றவாளிகளையும் சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது.
புதுப்புது வழிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சென்னை
பெருநகரில் உலவவிடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யுமாறு சென்னை பெருநகர காவல்
ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள்,
துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலைய எல்லையில்
தீவிர தேடுதல் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த பிப்ரவரி
14 முதல் 20 வரையிலான 7 நாட்கள் நடத்திய தீவிர கண்காணிப்பில் கஞ்சா உட்பட போதை பொருட்கள்
விற்பனை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா, 2,354 வலி நிவாரண மாத்திரைகள், 7 செல்போன்கள், ஆட்டோ
போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021 முதல் நடப்பாண்டு இதுவரையிலும் கஞ்சா மற்றும் போதைப்
பொருட்கள் தொடர்பாக 1166 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,284 குற்றவாளிகளின் சொத்து மற்றும்
வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் இதுவரை 1,165 வங்கிக் கணக்குகள்
முடக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 7 நாட்களில் மட்டும் 195 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் 28 குற்றவாளிகளை
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கஞ்சா பார்ட்டிகள் சென்னையைக் காலி செய்து
ஓடுகிறார்கள்.