Share via:
இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கும் நிலையில்,
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில்
கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு
திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே
தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும்
கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.
எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன். தமிழ் இனத்துக்கு
வலு சேர்க்கவே நாங்கள் இணைந்து நிற்போம். எங்களுக்கு இடையிலான உறவு தேர்தல் உறவு அல்ல.
அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் யாரேனும் பிரிக்க முடியுமா.
அது போல தான் திராவிட முன்னேற்ற கழகமும், விடுதலை சிறுத்தைகளும்.
அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம் திமுக. பட்டியலின மக்களின்
நலனை காக்கின்ற அரசு தான் நமது திராவிட மாடல் அரசு.
சமூக நிதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும்
அமைக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் வெல்லும் ஜனநாயக மாநாட்டினை கூட்டியுள்ளார்.
நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். ‘சர்வாதிகார பாஜக ஆட்சியை தூக்கி எறிவோம்,
ஜனநாயக அரசை நிறுவுவோம்’ என சபதம் ஏற்று, முக்கியமான 33 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்
திருமாவளவன். இந்த முழக்கம் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது
உறுதி..’’ என்று கூறினார்.
இதையடுத்து மாநாட்டின் தீர்மானங்களை திருமாவளவன் முன்மொழிந்தார்.
நாட்டின் 2ஆவது தலைநகராக சென்னையை அறிவித்தல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், ஒரே
நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுதல், ஆளுநர் பதவியை ஒழித்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மேலும், அமைச்சரவையில் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
வழங்க வேண்டும், அமெரிக்காவைப் போல விகித்தாச்சார அடிப்படையில் இந்தியாவில் தேர்தல்
நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து ராமர் பற்றி திருமா,. “எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும்
சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. எங்களுக்கு ராமர்
ஒன்றும் புதிதல்ல. எனது தந்தை பெயரும் ராமசாமி, தந்தை பெரியார் பெயரும் ராமசாமி. ராமரை
மையப்படுத்திய அரசியலையே எதிர்க்கிறோம். ஜெய் ஸ்ரீராமுக்கு போட்டியாக ஜெய்பீம் முழக்கத்தை
எழுப்புவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையை இரண்டாவது தலைநகர், ஆளுநர் பதவிக்கு ஆப்பு போன்றவை
எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத வெற்று தீர்மானங்கள் என்று எதிர்க் கட்சிகள் கிண்டலடித்துவருகிறார்கள்.