Share via:

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்துகிறோம்
என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பெருமைப்பட்டு வருகிறார். அதற்கு இழுக்கு நேர்வது
போன்று இன்று அதிகாலை காலை 6 மணி முதல் 7 மணிக்குள், அதாவது ஒரு மணி நேரத்திற்குள்
சுமார் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பெரும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
இன்று காலை திருவான்மியூர் இந்திர நகர் பகுதியில் வேலைக்கு சென்று
கொண்டிருந்த பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 5 சவரன் நகை பறித்துள்ளனர்.
இதனால் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற நிலையில் அடுத்ததாக அடையாறு
சாஸ்திரி நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அம்புஜம் என்ற பெண்ணிடம் இருந்து
அரை சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கிண்டி பகுதியில் காலையில் நடைபயிற்சி
சென்று கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சைதாப்பேட்டை பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த
இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை
பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர்
தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவங்களில்
ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்துள்ளது.
இதன் மூலம், பள்ளிக்கரணை பகுதியில் இன்று காலை செயில் பறிப்பு
சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய கும்பல் வேளச்சேரி, அடையாறு, சைதாப்பேட்டை வழியாக கிண்டி
வரை அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து,
சிசிடிவி காட்சிகளின் மூலம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி
வருகிறார்கள்.
இந்த நிலையில் இதேபோன்று கடந்த ஜனவரி 18ம் தேதி ஒரே நாளில் 8 இடங்களில்
செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியது. இதுவும் அதே பாணியில் நடந்துள்ளது. இன்று ஏழு
இடங்களில் நடைபெற்றது மட்டுமே காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும், இது
போன்று மேலும் சில இடங்களில் செயின் பறிப்பு நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்றே கூறப்படுகிறது.
மக்கள் மனதில் உறைந்திருக்கும் அச்சத்தையும் பீதியையும் அகற்றவேண்டிய
பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
புகார் வைத்துவரும் வேளையில் இப்படியொரு கரும்புள்ளி நடந்திருப்பது நிலைமையை மேலும்
மோசமாக்கியுள்ளது.