Share via:

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சத்யபிரியா என்ற கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர், மாணவி சத்யபிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது சண்டை முற்றி, அவரை ஒடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்தார். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைநத நிலையில், கடந்த 27ம் தேதி சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு 30ம் தேதி வழங்கப்படும் என்று ஒத்திவைத்தது.
இன்று (30ம்தேதி) சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரெயிலில தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷூக்கு மரணதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மாணவியின் பின் தொடர்ந்து தொல்லை அளித்ததன் பேரில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்த பின்னர் சதீஷ் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.