Share via:
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் இடைக்கால மனுவை தற்போது சாதாரண ஜாமீனாக மாற்றி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையில் கண்பார்வை உள்ளிட்ட உடல்நலக்குறைவால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.
எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை சாதாரணமாக ஜாமீனாக மாற்றக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இடைக்கால ஜாமீனில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை சந்திரபாபு நாயுடு கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.