Share via:
மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் வகையில் மத்திய குழு இன்று சென்னை வருகிறது. அதன்படி நாளை முதல் 2 நாட்கள் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
கடந்த 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்களில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத மழை காரணமாக பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. உடமைகள், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பொது மக்கள் மழை வெள்ளத்தில் பறிகொடுத்தனர். சாலைகளில் மரங்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வந்து சேர்ந்தார். அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேதப்பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்.
இதன் தொடர்ச்சியாக ரூ.5 ஆயிரம் கோடியை முதல்கட்ட நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மத்திய அரசும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.450 கோடியை வழங்குவதாக தெரிவித்தது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான மத்திய குழு இன்று (டிச.11) மாலை 4 மணியளவில் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிச.12 மற்றும் 13) 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிடுகின்றனர். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இக்குழுவினர் செல்ல உள்ளனர்.
இக்குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.