Share via:
சென்னையில் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை ஒரு ஜோடி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சர்ச்சையை எழுப்பினர். அதற்கு கைது செய்வோம் என்று கூறிய போலீசாரை கடுமையான வார்த்தைகளால் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரில் ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஜோடி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து காதில் கேட்க முடியாத அளவுக்கு தரக்குறைவான ஆபாசமான வார்த்தைகளால் போலீசாரை வசைபாடியுள்ளனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலினை கூப்பிடுவேன். பாக்குறியா? என்று கைநீட்டி அநாகரீகமாக அந்த நபர் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் கைது செய்வோம் என்று எச்சரித்தபோது, இவன் எல்லாம் என்னோட அள்ளக்கை… அரெஸ்ட் பண்ண போறீயா முடிந்தால் பண்ணுடா. போய் உன் ஆளை கூட்டிட்டுவா… இன்ஸ்பெக்டரை கூட்டிக்கொண்டு வா என்று மிரட்டியுள்ளார்.
மேலும் நாளை காலையில் உன் அட்ரெஸ் எல்லாம் எடுத்துவிடுவேன். ஒருத்தன் இருக்கமாட்டீங்கன்னு பல கெட்டவார்த்தைகளால் தாறுமாறாக பேசியுள்ளார். மேலும் அந்த நபர், அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியின் செல்போனை பிடுங்க வேண்டும் என்று சொல்ல, உடன் இருந்த பெண், இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய் என்று சொல்லும்படியான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசாரை தரக்குறைவாக பேசிய ஜோடி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வீடியோவில் பல்வேறு இடங்களில் பீப் சவுண்டு மட்டுமே கேட்க முடிகிறது என்று அந்த வீடியோவுக்கு மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.