Share via:

முதல்வர் ஸ்டாலினை கட்சிக்காரர்கள் அனைவரும் அப்பா என்று போஸ்டர் அடித்து வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் அப்பா என்று சொல்வதைப் பார்க்க முடிகிறது. அதே பாணியில் நடிகர் விஜய்யை அண்ணன் என்று அழைக்க வேண்டும் என்று மேலிடம் உத்தரவு போடுவதாக சொல்லப்படுகிறது.
டாக்டர் ராமதாஸ் அய்யா என்று அழைக்கச்சொன்னார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தார்கள். இந்த வழியில் நடிகர் விஜய்யை இது வரை தளபதி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். ஆனால், இனி அண்ணன் என்று அழைப்பது தான் மக்களுக்கு நெருக்கமான உணர்வை தரும் என்று பிரசாந்த் கிஷோர் ஐடியா கொடுத்திருக்கிறாராம்.
விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் 15 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண்களாக இருக்கிறார்கள். ஆகவே, இவர்களை அண்ணன் என்று அழைக்கச் சொல்வது நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் இப்தார் நோன்பு திறப்பு விழாவிலும் சரி, சர்வதேச மகளிர் தின விழாக்களிலும் விஜய்யை அண்ணா, அண்ணன் என்றே கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்டு வந்தனர்.
விஜய்யின் அண்ணன் அடைமொழியைப் பிரபலப்படுத்த “அண்ணன் வர்றார்’’ என்று பாடல்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விஜய் கட்சி மேடைகளில் எல்லாம் அண்ணன் பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
அப்பா கிடைச்சாச்சு, அண்ணன் கிடைச்சாச்சு, அப்படியே மக்களுக்கு ஒரு அம்மாவும், அண்ணியும் கிடைச்சா சந்தோஷம் தான்.