Share via:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த எம்.பி.க்களுக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை 12 மணிக்கு கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளியால் திக்குமுக்காடியது. தொழில் அதிபர் கவுதம் அதான விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (நவம்பர் 27) காலை 11 மணியளவில் அவை கூடும் என்று அவைத்தலைவர் அறிவித்தார். அன்றைய தினமும் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதானி விவகாரத்தில் பா.ஜ.க. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.