Share via:
கலைஞானி கமல்ஹாசனின்
70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு
முதல்வர் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியினர் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்பாராத
விதமாக பா.ஜ.க.வும் சீமானும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் கமலுக்கு
எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் குதித்திருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இந்த நேரத்தில் கமல்ஹாசனின்
அடுத்த படமான மணிரத்னத்தின் தக்லைப் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு
கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எதிர்பாராத திசையில் இருந்து கமலுக்கு
ஆதரவு கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் அரசியலை
எதிர்த்து கடுமையாகப் பேசிய நாம் தமிழர் சீமான் இன்று, ‘’திரைக்கலை மீது கொண்டிருக்கும்
அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப்
பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்! நடிப்பின் பேரிலக்கணமாய்
திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின்
பேராசான்! நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல்
ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி! இந்நூற்றாண்டின்
ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை! மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
பேரன்பிற்கினிய அண்ணன் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்’’
தெரிவித்திருக்கிறார்.
விஸ்வரூபம் படத்தில்
இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்த்து போலவே அமரன் படத்திலும் கமல்ஹாசன் திட்டமிட்டு
அவதூறு பரப்பியிருக்கிறார் என்று இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ. இன்று போராட்டத்தை
அறிவித்திருக்கிறது. கமல்ஹாசன் வீடு மற்றும் தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பா.ஜ.க. தரப்பில்
எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் படத்தைப் பார்த்து
படக்குழுவைப் பாராட்டிய பா.ஜ.க. தலைவர் ஹெச்.ராஜா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் இன்று, ‘’தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இண்டியாவின் அரசியல் கரம்
எஸ்.டி.பி.ஐ கமல்ஹாசனுக்கு விடுத்துள்ள மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்’’
என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இத்தனை களேபரங்களுக்கு
மத்தியில் கமல்ஹாசன் பிறந்த நாள் கொண்டாட சென்னையில் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.
புதிய தொழில்நுட்பமான ஏஐ பற்றி படிப்பதற்கு வெளிநாட்டில் டேரா போட்டிருக்கிறார் கமல்ஹாசன்.