Share via:
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று கூடி தற்போது நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்துக் கொண்டது. இதற்கு காரணம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைதான் என்றும், இனி கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
கடந்த 5ம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய கேசவ விநாயகம், ‘‘பா.ஜ.க. தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களை டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது’’ என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவரவர் விருப்பம் நாம் அதை பற்றி பேசத்தேவையில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு வரும் கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுளளனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டணி யார் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.