Share via:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் தி.மு.க. அதிவேகம்
காட்டிவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்
குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல்
அறிக்கை தயாரிக்கும் குழு இன்று நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் அமைந்துள்ள கெங்கா
கிராண்டியூர் திருமண மண்டபத்தில் கூடியது.
இதில் திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு,
தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய ஆகிய
6 திமுக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில்
முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள்
உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்
குறித்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் பரிந்துரையை
கோரிக்கைகளை வழங்கினர்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி இதுகுறித்து, ‘’திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை,
கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் நம்முடைய தேர்தல்
அறிக்கை இருக்கும்.
ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில
உரிமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல மக்களைப் பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு
நம்முடைய ஒற்றுமையை சிதைத்து ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து மக்களுக்கு
இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து அங்கே முன்வைத்து மக்கள்
சந்திக்கக்கூடிய அன்றாட பிரச்சனைகளாக இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு இல்லாதது, விவசாயிகள்
பாதிக்கப்பட்டிருக்கிறது, மீனவர்களுடைய உரிமைகளை ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுவது இவைகள்
தான் மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி, பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள்
தான்.
அதனால் இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய
பிரச்னைகளை அதற்கான தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு.
உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய இந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை,
அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம்.
ஒன்றிய ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான
உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய
உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம்
வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சராக உங்களுடைய வழிகாட்டுதலில் வழியே ஒரு
ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும்…’’ என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,
திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் மற்றும்
தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
எம்.பி., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச்
செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர்
பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான
மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்
ரெ.மகேஷ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய
மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன்
திமுக மகளிரணி செயலாளரும்,முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தப்பட்டு வருகிறது . நேற்று தூத்துக்குடியில்
நடைபெற்றது, 7-ம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சாவூரிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை
குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும்
11-ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இறுதியில் 21, 22, 23ந்தேதிகளில்
3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை
கேட்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி
நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும்
ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி
செய்யப்படும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு
உள்ளது.