Share via:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயல் கோரதாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 56 வயதான மின்பாதை ஆய்வாளர் பாலச்சந்தர் மற்றும் 56 வயதான கம்மியர் அண்ணாமலை என்ற இருவரும் பவித்திரம் தரைப் பாலத்தைக் கடக்கும் போது எதிர்பாராத விதமாக மழை வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிட்டனர்.
காணாமல் போன இருவரையும் 2 நாட்களாக தேடிய நிலையில் நேற்று (நவம்பர் 3) சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த 2 மின்சார வாரிய ஊழியர்களின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.