Share via:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெல்லை, கோவை தி.மு.க. மேயர்களிடம்
ராஜினாமா கடிதம் வாங்கி அதிரடி காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உட்கட்சி பூசல்
கொடி கட்டிப் பறக்கும் மதுரை மேயரிடமும் விரைவில் ராஜினாமா கடிதம் வாங்கப்பட இருப்பதாகத்
தகவல்கள் கசிகின்றன.
கோவை தி.மு.க.வுக்கு பொறுப்பாக செந்தில்பாலாஜி இருந்த காலத்தில்,
அவரது பரிந்துரையின் பேரில் மேயர் ஆனவர் கோவை மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா
ஆனந்தகுமார். இவரிடம் ராஜினாமா வாங்கியதற்கு முக்கியக் காரணம், நாடாளுமன்றத் தேர்தலில்
இவரது ஏரியாவில் தி.மு.க. வாங்கிய வாக்குகளே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
எக்கச்சக்க உட்கட்சி பூசல் இருந்தாலும் தி.மு.க.வுக்கு வேலை பார்த்து
வாக்குகள் வாங்கிக்கொடுத்திருந்தால் பதவி தப்பியிருக்கலாம். ஆனால், தி.மு.க.வை வளர்ப்பதை
விட அக்கம்பக்கத்து நபர்களிடம் சண்டை போடுவதிலே ஆர்வம் காட்டினார். மேலும் கல்பனா செந்தில்
பாலாஜி ஆதரவாளர் என்பதால், துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு உரிய முக்கியத்துவம்
கொடுக்கவில்லை. கான்ட்ராக்ட் உள்ளிட்ட விசயங்களில் நேருவிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக
சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்பனா சரியாக பணியாற்றவில்லை
என்று புகார் எழுந்தது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்பனாவின் 19வது வார்டில்
திமுக-வை விட, பாஜக அதிக வாக்கு வாங்கியது மேலிடத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மேலும், கோவை புறநகர் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, மாநகர் முழுவதுமே பாஜக அதிக வாக்குகளை
வாங்கியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு
திமுக-வுக்கு களப்பணியாற்றும் விதமாக மேயரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின்
தள்ளப்பட்டுள்ளார்.
அதோடு அமைச்சர் நேருவிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எல்லா விஷயங்களிலும் எங்க அமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி பெயரைச்
சொல்லி தப்பித்ததும் முக்கியக் குற்றச்சாட்டாக மாறியது. அதோடு, பக்கத்து வீட்டுக்காரர்களை
தரக்குறைவாக நடத்தி மிரட்டுவதாக கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.
முக்கியமாக அவர் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் அதிகமிருப்பதாக சொந்தக் கட்சியினரே புகார்
கூறினார்கள். மேலும், மாநகராட்சி ஆணையர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள்
உட்பட அத்தனை பேரிடமும் அதிருப்தி நிலவியதால் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுள்ளதாகச்
சொல்கிறார்கள்.
பரமபத கட்டத்தில் ஏணி போன்று விறுவிறுவென ஏறிய கல்பனா, திடீரென
அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறார். அதேபோன்று நெல்லை மேயர் மாற்றப்பட்டதற்குப் பின்னணியில்
சொந்தக் கட்சியினரின் அதிருப்தியும் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியும் கட்டுப்படவில்லை
என்பதும் குற்றச்சாட்டாக சொல்லப்படுகிறது.
நெல்லை மேயராக சரவணன் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும்
அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. அதனால், மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி
கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் கடிதம்
கொடுக்கும் அளவுக்கு நிலைமை சிக்கல் அடைந்தது. நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,
மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள்
பலரும் இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கூட இரு தரப்பினருக்கும்
இடையே சமரசம் எட்டப்படவில்லை.
சாலை வசதி, மழைநீர் வடிகால் பணிகள், மின்விளக்குகள் பொருத்துதல்
உள்ளிட்ட மக்களின் அடிப்படையான பணிகளை நிறைவேற்றக் கூட முடியாத அளவுக்கு மேயர் மற்றும்
கவுன்சிலர்கள் மோதல் நீடித்தது. கவுன்சிலர்கள் பலரும் தங்களின் வார்டுக்குத் தேவையான
பணிகளை நிறைவேற்றாமல் மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்கள்.
இந்த நிலையில், மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்த கட்சித் தலைமை,
அவரின் நடவடிக்கையை கண்டித்து ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த அதிரடி இரண்டு மேயர்களுடன் நிற்கப்போவதில்லை என்கிறார்கள்.
இன்னும் மூன்று மேயர்கள் மீது தலைமை அதிருப்தியில் இருக்கிறது. அநேகமாக அடுத்த நடவடிக்கை
மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள். அமைச்சர் பழனிவேல்
தியாகராஜனின் ஆதாவாளரான இந்திராணியின் நடவடிக்கைகளால் அமைச்சர் மூர்த்தி கடும் அதிருப்தி
அடைந்திருக்கிறாராம்
ஸ்டாலின் நடவடிக்கை தொடரட்டும். மக்களுக்கு சேவை செய்யாமல் கட்சிக்குள்
கலகம் மூட்டுபவர்கள் விரட்டப்பட வேண்டியது அவசியம்.