Share via:
திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்திதை இன்று (டிச.1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘இது அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த அயோத்தி தாசரின் பெருமையை போற்றும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு அவரது திருவுருவ சிலை அமைக்கப்பட்டும் என்று அறிவித்தேன். அறிவொளி இல்லமாக இந்த மணிமண்டபம் அமைந்துள்ளது. அயோத்திதாசரின் திருவுருவ சிலையை திறந்து வைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.
அயோத்திதாதர், தமிழன், திராவிடம் ஆகிய 2 சொற்களை அடையாள சொல்லாக மாற்றியவர் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1907-ம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கி, அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்தார் என்று பல நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர் என்று புகழாரம் சூட்டிய அவர், சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அயோத்திதாசர் ஈடுபட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, பவுத்த சமய வழியில் தீண்டாமைக்கு எதிரான சிந்தனைகளை வளர்த்தெடுத்த அயோத்திதாசர், சுயமரியாதை, சமதர்ம கருத்துக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்று புகழ்ந்து பேசினார்.