Share via:
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 3ம் தேதி முதல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர்.
பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 5வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் கணக்கில் வராத ரூ.18 கோடி கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் காசா கிராண்ட் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் 4 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு 2 சூட்கேஸ்களில் பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானவரித் துறையினர் நடத்திய 5 நாட்கள் சோதனையில் இரண்டு சூட்கேஸ்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்களின் துணையுடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு இன்று எடுத்துச் சென்றனர்.
இந்த சூட்கேஸ்களில் யாரிடம் இருந்து பெறப்பட்டது? அவற்றில் என்னென்ன உள்ளன என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு சூட்கேஸ்களில் பணம் எடுத்துச் சென்று வங்கியில் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.