Share via:
அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி நேற்று (நவ.5) தீயாக பரவியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர் எனவும், மலைவாழ் பழங்குடியினரான ‘நாகா’ இன மக்கள் குறித்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கண்டனப்பதிவில், ‘‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என, பகிரங்கமாக இழவுபடுத்தியது. கேவலமானது. இதை ஏற்க முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, ‘‘நாகாலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி’’ என்று கூறியுள்ளார். மேலும் நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது’’ என்று பதில் அளித்துள்ளார்.