Share via:
கல்காஜி தொகுதியில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி இப்போது டெல்லி முதல்வராகத் தேர்வு பெற்றுள்ளார்.
தற்போது கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் அதிகபட்சமாக 11 துறைகளை நிர்வகிக்கும்
அதிஷி, கெஜ்ரிவால் நம்பிக்கைக்கு உரியவர். அதே நேரம் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கட்சியை
உடைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிஷி டெல்லியின்
மூன்றாவது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஷீல்லா
தீக்ஷித், பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முதல்வராகப் பொறுப்பு வகித்த நிலையில்,
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிஷி பெயரை முன்மொழிந்திருக்கிறார்.
மதுபான கொள்கை ஊழல்
வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில்
இன்று கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.. இதனிடையே,
அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் கேஜ்ரிவாலின்
இல்லத்தில் சந்தித்து, டெல்லி அரசை அடுத்து வழிநடத்தக்கூடியவர் யார் என்பது குறித்து
விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது.
முன்னதாக ,”அரவிந்த்
கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள்
என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்” என்று மனீஷ் சிசோடியா
தெரிவித்திருந்தார். இந்தநிலையில் எம்எல்ஏகளுடன் நடந்து வரும் கூட்டத்தில், அடுத்த
முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு
அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின்
சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மனீஷ்
சிசோடியாவுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆகவே, ஆதரவாளர்களுடன் கட்சியை உடைக்கவும்
ஆட்சியை பிடிக்கவும் இவருக்கு பா.ஜ.க. உதவக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள். எப்படியாவது
ஆம் ஆத்மியை உடைக்க வேண்டும் என்று தீவிரம் காட்டும் பா.ஜ.க.வுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது வெளியே இருக்கிறார் என்றாலும் கடும் சிக்கல் ஏற்பட இருப்பதாக
டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.