Share via:
உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணை எடுக்க
வேண்டும் என்று முண்டியடித்த கூட்டம் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 120க்கும் மேற்பட்டோர்
மரணம் அடைந்திருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான்
இறந்துகொண்டிருக்கும் என்று வைரமுத்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றிருக்கிறார்கள்.
சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில்
குழந்தைகளும் பெண்களும்தான் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள்.
இது கோயில் திருவிழா அல்லது கும்பமேளா அல்ல. ஒரு சாமியார் நடத்திய
கூட்டம். நாராயண சாகார் – ஹரி எனப்படும் சாமியார். இவரைப் பொதுவாக ‘போலே பாபா’ என்று
மக்கள் அழைக்கிறார்கள். இவருக்கு உபியின் ஊரகப் பகுதிகளில் கணிசமான பக்தர்கள் இருக்கிறார்கள்.
வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் திரிவார். கலர் கலராக கூலிங் கிளாஸ்கள்
அணிவார். சாமியார் என்றாலும் தன் மனைவியுடன்தான் காட்சி (!) அளிப்பார். அந்த மனைவியையும்
‘மாதாஸ்ரீ’ என்று மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள். 30 ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம் கட்டி
வைத்திருக்கிறார். அந்த ஆசிரமத்துக்கே 12-15 ஆயிரம் பக்தர்கள் தினம் தினம் வருகிறார்கள்.
ஹத்ரஸ்சில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்
திரண்டிருக்கிறார்கள். அவரது சொற்பொழிவு முடிந்ததும் ஆயிரக்கணக்கானோர் அவரை நெருங்க
முயற்சி செய்திருக்கிறார்கள். அவர் காலடி மண்ணை ஒரு பிடி எடுக்க முயன்றிருக்கிறார்கள்
என்று தெரிகிறது! அதில் நடந்த தள்ளுமுள்ளுவில் இந்த நெரிசல் நடந்திருக்கிறது.
சுற்று வட்டாரத்தில் ஆம்புலன்ஸ் எதுவும் இருக்கவில்லை. உள்ளூர்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருமே இல்லை. இறந்த உடல்களையும் காயமுற்றவர்களையும் தூக்கிக்
கொண்டு ஆங்காங்கே இருந்த குட்டி யானை வண்டிகளில் ஏற்றி அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள
மருத்துவமனைகளுக்கு விரைந்திருக்கிறார்கள். இப்படி ஒரு தள்ளு முள்ளு துவங்கிய உடனேயே
அந்த பாபாவும் மாதாஸ்ரீயும் சம்பவ இடத்தை காலி செய்திருக்கிறார்கள்.
‘ஆன்மீகக் கூட்டம்’, ‘ஆன்மீகவாதி’, ‘ஆன்மீக அரசியல்’, ‘ஆன்மீக
சிந்தனை’, ‘ஆன்மீக உணவு’ என்றெல்லாம் எந்த வார்த்தையுடனும் இணைத்து, அந்த வார்த்தைக்கு
ஒரு மரியாதையை உருவாக்கி விட முடிகிறது. ஹத்ரஸ்சில நடந்த ஆன்மீகக் கூட்டம் உண்மையில்
ஒரு சாதாரண ஆன்மிக வியாபாரியின் கூட்டம். அதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் நசுங்கி
செத்துப் போயிருக்கிறார்கள். இந்த துக்க சம்பவத்தினை ஆதாரமாக வைத்து போலே பாபா பற்றிய
தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவரது ஆசிரமம் குறித்து, அதற்கு வரும் நிதி
ஆதாரம் குறித்தெல்லாம் ஆராயப்பட வேண்டும்.
இந்த ‘ஆன்மீகம்’, ‘சாமியார்’
போன்ற போர்வைகளில் மயங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முனைப்புகள் துவங்க வேண்டும்.
போலே பாபா வெளிநாட்டுக்கு தப்பியோடுவதற்கு முன்பு கைது செய்யப்பட வேண்டும். ஆனால்,
உ.பி.யில் அப்படி நடக்குமா என்பதே சந்தேகம் தான்.