Share via:
அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்திய தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் ஏற்கனவே மிசோரம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் நாளை (நவ.25) ராஜஸ்தானிலும், வருகிற 30ம் தேதி தெலுங்கானாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எப்படியும் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே, சதீஷ் பூனியா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித்சிங் கூனார் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு நாளை (நவ.25) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. தரப்பில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (நவ.23) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன்படி நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடித்திட உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுகின்ற நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.