Share via:
வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்பதால் பொது மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள்.
கடந்த மே மாதம் 10ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்புப் பெறுவதுதான் அது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
அதற்கான கடைசி நாள் கடந்த செப்டம்பர் 30ம் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கால அவகாசம் அக்டோப்ர 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கிடையில் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் மாற்றி வந்தனர். அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள் என்பது பொதுமக்களிடையே தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் பொது மக்கள் சிலர் தாங்கள் மறந்து வைத்திருந்த பணத்தை பின்னர் கண்டுபிடித்து வருத்தப்பட்ட செய்திகள் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக பொது மக்கள் தங்களிடம் ஏதேனும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிச்சமாக இருக்கிறதா என்று வீட்டை புரட்டிபோட்டு அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
