தினமும் மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று ஆம் ஆத்மி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப்-2 சர்க்கரை நோயாளியான அவர், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணையின்போது, “மாம்பழம் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை கெஜ்ரிவால் சாப்பிடுகிறார். இதனால் சர்க்கரை அளவு அதிகமானால் அதைக் காரணமாகக் கூறி ஜாமீன் பெற அவர் முயற்சிக்கிறார்” என அமலாக்கத் துறை வாதிட்டது. இந்த குற்றச்சாட்டை கேஜ்ரிவால் தரப்பு மறுத்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “கெஜ்ரிவால் தனியார் மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க முடியாது. அதேநேரம், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும். சர்க்கரை நோய் நிபுணர்களைக் கொண்டு அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் இரண்டு யூனிட் வழங்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. அதேநேரம், சர்க்கரை நோய் நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலே அவருக்கு ஊசி போட வேண்டும், இந்த விஷயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஆம் ஆத்மி எச்சரிக்கை செய்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link