Share via:
எம்.ஜி.ஆர். நினைவுநாளன்று கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துவதா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது.
விழா அழைப்பிதழ்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், விஜய், அஜித், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும் வேலையும் ஆரம்பமாகியுள்ளது. விழாவுக்கு எப்படியும் அனைத்து நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் விழா ஏற்பாட்டாளர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து பரவலாக பேசி வரும் நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
அதாவது கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் டிசம்பர் 24ம் தேதி, முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நினைவு தினமாகும். தமிழ்த் திரையுலகில் நடிப்பு, அரசியல் பன்முகத்தன்மை கொண்டு ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு இதுவரை திரைத்துறை சங்கங்கள் சார்பில் எந்த விழாவும் முன்னெடுக்காத நிலையில் கலைஞருக்கு மட்டும் நூற்றாண்டு விழாவை நடத்த உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிலும் எம்.ஜி.ஆரின் நினைவுதினத்தன்று விழா நடத்தப்படுவதும் ஒரு பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
அரசியல் கட்சியையும் தாண்டி தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆரின் பங்கு அளப்பரியது. வசனகர்த்தாவில் எப்படி கலைஞர் முடிசூடா மன்னனோ அதே அளவுக்கு நடிப்புக்கு மக்கள் திலகம் என்று பட்டமளிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னன் என்று மக்கள் மனதில் பதிந்துள்ள போது இது என்ன ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற பேச்சு எழுந்துள்ளது விழா ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.