News

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

Follow Us

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருநதன. திமுக ஆட்சியில் சரியில்லை. செத்த பிணத்துக்கு சிகிச்சை பார்க்கிறார்கள் என்றெல்லாம் வீடியோ போட்டு வைரல் செய்த நடிகரும் அ.தி.மு.க. உறுப்பினருமான கஞ்சா கருப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நடந்த சம்பவம் குறித்துப் பேசும் நடிகர் கஞ்சா கருப்பு, ‘கால் வலி படுத்தி எடுத்திட்டிருந்தது. அதனால போரூர்ல இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். ஆஸ்பத்திரின்னாலே எமர்ஜென்சிக்காகத்தான் வருவாங்க. அதனாலதான் 24 மணி நேரமும் அது இயங்கணும்னு சொல்றாங்க. அப்படியிருக்க  வலியோட போனா அங்க என்ன ஏன்னு கேக்கக் கூட ஆள் இல்லை. ஒரு அம்மா வந்து ‘அப்படி உட்காருங்க, வருவாங்க’னு சொல்லிட்டு அதுபாட்டுக்குப் போயிடுச்சு. நானும் செத்த நேரம் உட்கார்ந்திருந்தேன்.

ஆனாலும் குறுக்க நெடுக்க போறாங்க வர்றாங்களே தவிர, யாரும் வந்து பார்க்க மாட்டேங்குறாங்க. அதனால கடுப்பாகித்தான் ‘நீங்க டாக்டர் நம்பர் கொடுங்க, நான் பேசறேன்’னு கேட்டேன். நம்பரும் தர முடியாதுன்னாங்க. அதனால வேற வழியில்லாமத்தான் கத்த வேண்டியதாகிடுச்சு. நான் கத்தறதைப் பார்த்து என்னை மாதிரியே நொந்து போய் உட்கார்ந்திருந்த இன்னும் கொஞ்சம் பேர் கூடச் சேர்ந்து சத்தம் போட்டாங்க.

காலையில 8 மணிக்கு வரவேண்டிய டாக்டர் பிரைவேட் கிளினிக் வைச்சிருப்பதால் மதியம் 3 மணிக்கு வருவாருன்னு சொன்னாங்க. ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வருகிறது. ஒரு நாய் கடிச்சு சிகிச்சைக்கு ஒருத்தர் வந்திருக்கார். ஆனால், மருத்துவரே இல்லைன்னு சொல்றாங்க.

அதுக்குப் பிறகு யார் எங்க என்ன பேசினாங்கனு தெரியலை, ஒரு அம்மா வந்து, ‘என்னங்க பிரச்னைனு வந்து கேட்டுச்சு. ‘நான் தான் டாக்டர். உடம்புக்கு முடியலைனு சொல்லி லீவு போட்டிருந்தேன். இப்ப டூட்டிக்கு வரச் சொல்லிட்டாங்க. வாங்க என்ன பிரச்னைனு சொல்லுங்க’னு வேண்டா வெறுப்புடன் அவங்க கூப்பிட்ட தோரணையே சரியில்லை.

‘வேண்டாம்மா, இதுக்கு மேல உங்ககிட்ட நான் ட்ரிட்மென்ட் எடுத்தா ஏதாச்சும் ஒரு ஊசியைப் போட்டு என்னைக் கொன்னு போட்டாலும் போடுவீங்க’னு சொல்லிட்டு சிகிச்சையே எடுக்காம திரும்பி வந்துட்டேன். கடந்த கால ஆட்சியில இருந்தப்பெல்லாம் இந்தத் தொல்லையெல்லாம் இல்லீங்க, இப்ப எல்லாம் தப்பு தப்பா நடக்குது. இந்த துறை அமைச்சர்  என்ன செய்றார்னு கேட்டான்” என்கிறார். கஞ்சா கருப்புடன் சேர்ந்து சிலர் ஒன்று கூடி பிரச்னை செய்ததால், போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இந்த விவகாரம் எழுந்ததும் மேயர் பிரியா, ‘’பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட , வளசரவாக்கம் நகர சமுதாய நல மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள், மருத்துவர்கள் இல்லையென இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை உடனே நடத்தப்பட்டது. இரவு பணி முடித்த மருத்துவர் பணியில் இருந்தார். குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காலை பணிக்கு வந்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட நபர் அவர் பெயரை புறநோயாளி பதிவேட்டில் கூட பதிவு செய்யாமல், குழந்தை நல மருத்துவர் அறைக்கு நேரடியாக சென்று மருத்துவரிடம் வரிசையில் இருந்த மற்ற நோயாளிகளை தவிர்த்து, உடனடியாக சிகிச்சை அளிக்க கூறி வற்புறுத்தி பிரச்னை செய்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் வைரலானதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’நடிகர் கஞ்சா கருப்பு கட்சிக் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், மேலும் கிளறினால் அவருக்குத் தான் பாதிப்பு” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இதையடுத்து அ.தி.மு.க.வினரும் நாம் தமிழரும் மா.சுப்பிரமணியனை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இர்பான் என்றால் வருடிக் கொடுக்கும் மா.சுப்ரமணியன் கஞ்சா கருப்பு மீது மட்டும் பாயலாமா என்று கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link