Share via:
அமலாக்கத் துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் கெத்து
காட்டி வருகிறார் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல், பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து
இறக்கியே தீரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிவருகிறார்.
இந்த இருவருக்கும் இடப்பட்டிருக்கும் எச்சரிக்கையே முதல்வர் ஹேமந்த் சோரன் கைது என்று
அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட்
முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28ம் தேதி அவரிடம்
மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்த நிலையில் திடீரென அவர் தப்பித்துச்
சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று
முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும்
அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக
அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர்.
ரகசியமாக காரில் ஊர் திரும்பிய முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்
துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை
ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். சோரன். அவரது மனைவி கல்பனா முதல்வராக பதவி
ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய
ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்கிறார்.
பீகாரில் நிதிஷ்குமார் போன்று பா.ஜ.க.வுக்கு பணிந்து போயிருந்தால்
இந்த கைது நடவடிக்கையே நடந்திருக்காது, இதனை சட்டப்படி சந்திப்போம் என்று எதிர்க்கட்சிகள்
உறுதி எடுத்திருக்கின்றன.
அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால் என்று சொல்லப்படுகிறது.