Share via:
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று ஆளும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 8 பேர் தானாக முன்வந்து சரணடைந்த நிலையில் மேலும் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எழுந்த தொடர் புகார்களை தொடர்ந்து சென்னை கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்ட அருண், ரவுடிகளின் அட்டகாசம் அடியோடு அடக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கித்தரப்படும் என்று உறுதியளித்தார்.
இதற்கிடையில் நேற்று (14ம்தேதி) முக்கிய குற்றவாளி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி பல நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் போது பொற்கொடி இது குறித்து கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.