அரசியல் படுகொலை என்று சென்னையை நான்கு நாட்கள் பாடாய் படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் முழு உண்மைகளும் ஒப்புதல் வாக்குமூலமாக வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னே ஆளும் கட்சி இல்லை என்றாலும் அரசியல் இருக்கிறது.  

கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அன்று இரவே ஆறு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். நகர் முழுக்க பெரும் கலவரம் மூளும் சூழல் உருவானது. சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று பா.ரஞ்சித் உள்ளிட்ட அமைப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால், அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்ற பத்திரிக்கையின் படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுர் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும் பிரபல ரவுடியான சம்போ செந்தில் ஏ2 குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரவுடி சீசிங் ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் ஆகிய இரண்டு பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.

அதன்படி தனது மகன் அஸ்வத்தாமனின் அரசியல் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலை திட்டம் குறித்து தனது மகன் அஸ்வத்தாமன் வழக்கறிஞர் அருள் மூலம் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறிய ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்வதற்கு ஆகும் மொத்த செலவையும் தானே ஏற்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கொலை படுகொலை செய்யப்பட்டதை பயன்படுத்திக் கொண்டதாகவும் ரவுடி நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனுக்காக சிறையில் இருந்த போது ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்களையும் எச்சரித்ததாகவும் ரவுடி நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ரவுடி நாகேந்திரனின் மகன் காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி ஆவார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக அஸ்வத்தாமன் அளித்த வாக்குமூலத்தில் அங்கிள் என உறவாடி அஸ்வத்தாமனை நெருங்கியதாக தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னே இருந்த உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link