Share via:
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் பிரபல இயக்குனரின் மனைவி சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அரங்கேறியதுதான் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகாலை. கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புனரமைக்கப்பட்டு வரும் தனது வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்த கொலையாளிகள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து ஸ்கெட்ச் போட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியாக உள்ள மொட்டை கிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா மேல் காவல்துறையினர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். மேலும் மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால், அவரிடம் ஒரு வழக்கு தொடர்பாக பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.