Share via:
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வத்தாமன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் இந்த அஸ்வத்தாமன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் தனதுவீட்டு கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கட்சி பிரமுகர் என்ற அடையாளத்தையும் தாண்டி வழக்கறிஞர் மற்றும் மிகச்சிறந்த மனிதாபிமானியாக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரண்டரான 11 பேரும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே இந்த கொலை நடந்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதனால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மையான கைதிகளை கைது செய்யும் படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து முக்கிய கொலையாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது எங்கெங்கோ இருந்து தொடர்பு கிடைத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரமுகரான அஸ்வத்தாமன் 22வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரன் மகன் என்று தெரிய வந்துள்ளது.
யார் இந்த அஸ்வத்தாமன்?
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் மாநில முதன்மை பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி தலைமை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.