Share via:
இந்தியாவின் மற்ற
மாநிலங்களில் எல்லாம் வேளாண் நிலம், பயிர் குறித்த மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட
வேண்டிய டிஜிட்டல் அளவிடும் பணியை அரசு ஊழியர்களை வைத்து செய்து வரும் நிலையில், தமிழக
அரசு மட்டும் சுமார் 20,000 வேளாண் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி அரைகுறையாக சர்வே
எடுத்து வரும் அவலம் அம்பலமாகியிருக்கிறது. மாணவர்கள் என்றால் உங்கள் வேலைக்காரர்களா
என்று அத்தனை எதிர்க் கட்சிகளும் குரல் கொடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில், திருவள்ளூர்
மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல்
பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த
வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு
வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு
சென்ற போது, அங்கிருந்த குண்டர்களால்
சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து
பல மணி நேரம்
சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின்
தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற பகுதிகளில்
பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு,
தேள் போன்ற உயிரினங்கள் கடித்து
அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும்
போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால்
பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா? என்று
அ.தி.மு.க., பாட்டாளி
மக்கள் கட்சி உள்ளிட்ட அத்தனை எதிர்க் கட்சிகளும்
குரல் கொடுத்துவருகிறார்கள்.
ஏற்கெனவே
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே
பணிகளுக்கு சென்ற ஒரு மாணவி
பாம்பு கடித்ததாலும், இன்னொரு மாணவி விசப்பூச்சி
கடித்ததாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆகவே,
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மத்திய
அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார்
நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக
அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட
வேண்டும். எனவே, டிஜிட்டல் பயிர்
சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை
அரசு விடுவிக்க வேண்டும் என்று
தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்கள்.
ஆனாலும், அரசு இன்னமும்
மெளனம் சாதிப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.