சீமானை தி.மு.க.வினர் தொடர்ந்து டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லாத கட்சி என்று தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த விமர்சனத்தை அடித்து நொறுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகி நிற்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றதும் பா.ஜ.க. களத்தில் இறங்கி அதிக வாக்குகளை வாங்கி முக்கிய எதிர்கட்சியாகத் திகழும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் திடீரென இந்த தேர்தலில் இருந்து பா.ஜ.க.வும் விலகியிருக்கிறது. இது குறித்து அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது தேசிய தலைவர் நட்டா தமிழக பாஜகவின் கோரிக்கை ஆராய்ந்து பின் அனுமதி வழங்கியதால் எடுத்த முடிவு. எங்கும் புறக்கணிக்காத கட்சி ஏன் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது என்பதை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தலை நாங்கள் கண்காணிப்போம். தேர்தலில் போட்டியிட்டால் தான் தைரியம் என்பதில்லை. அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசியுமான தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புகிறோம். 2026 தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்..’’ என்று கேட்டுள்ளார்.

இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’தி.மு.க.வினரையும் பெரியாரையும் கொடூரமாகத் தாக்கிவரும் சீமானுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியாத நிலையில், இப்படி அவரது ஆதரவாளர்கள் இரண்டு கட்சியினரும் தேர்தலில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஈரோடு தேர்தலில் சீமானை எதிர்க்கட்சியாக செயல்பட போட்ட திட்டத்தின் அடிப்படையில்தான் சீமான் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக வாங்கி தேர்தலில் டெபாசிட் பெற்றுவிடலாம் என்று ஆசைப்படுகிறார். அதற்கு இரண்டு கட்சியினரும் மறைமுகமாக உதவுகிறார்கள். அதற்குத்தான் சீமான் இப்போதே திரள் நிதியை தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.கவின் பணம் மற்றும் தேர்தல் கமிஷன் உதவி மூலம் சீமானை டெபாசிட் வாங்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஒரே கூட்டணி என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது’’ என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link