Share via:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக திடீரென கச்சத்தீவு விவகாரத்தை
அண்ணாமலை பேசத் தொடங்கினார். அண்ணாமலையை அடுத்து வரிசையாக பா.ம.க.வின் ராமதாஸ், தினகரன்
என்று ஆளாளுக்கு அதுகுறித்து பேசத் தொடங்கினார்கள். இவையெல்லாம் போதாது என்று மத்திய
அமைச்சர் ஜெய்சங்கரும் அவர் பங்குக்கு அடிமட்டத்துக்கு இறங்கிவந்து கச்சத்தீவு குறித்து
ஒரு பேட்டி கொடுத்தார்.
இது மீனவர்களிடம் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும் என்று அண்ணாமலை
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சீனாவின் அடாவடி செயல் ஒட்டுமொத்த பா.ஜ.க.வின் வீரத்தையும்
கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட
30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின்
மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா
மாற்றிஉள்ளது. சீனாவால் மறுபெயரிடப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள்,
12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு துண்டு நிலம் ஆகியவை அடங்கும்.
புதிய பெயரில் சீன எழுத்துகள், திபெத்தியன், பின்யின்,மாண்டரின்
சீனத்தின் ரோமானிய எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி விரிவான அட்சரேகை, தீர்க்க
ரேகைஅடங்கிய உயர்-தெளிவுத்திறன் கொண்ட வரைபடத்தையும் வெளியிட்டுள்ளதாக சீன சிவில்
விவகார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹாங்காங் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா கடந்த 2017-ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை
தன்னிச்சையாக மாற்றியது. அதையடுத்து, 2021ல் 15 இடங்களின் பெயர்களையும், 2023ல் 11
இடங்களின் பெயர்களையும் மாற்றி பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், 4வது முறையாக
அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை சீனா தற்போது தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது.
சீனாவின் இந்த மறுபெயரிடும் நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் ஜெயசங்கர்,
‘அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த
பகுதி. பெயரை மாற்றுவதால் எதார்த்த நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால், இதுகுறித்து மோடி எதுவும் வாய் திறந்து பேசவே இல்லை. இந்த விவகாரம் இந்தியா
முழுக்க கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. குட்டியூண்டு நாடான இலங்கையிடம் கச்சத்தீவை
பெற முடியாத மோடியால், இழந்த இடத்தை மீட்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.