Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியை சந்தித்த அண்ணாமலையை
தமிழகத்தில் இருந்து அனுப்புவதற்கு திட்டமிட்டு லண்டன் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அண்ணாமலையின் நெருங்கிய கூட்டாளி தங்கக் கடத்தலில் சிக்கியிருப்பதை அடுத்து
அண்ணாமலைக்கும் சிக்கல் வரும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை போடப்படும் என்றும்
சொல்லப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள்
அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில்,
பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை செய்யும் ஒரு கடையை (ஏர்ஹப்) மையமாக வைத்து, இந்தக்
கடத்தல் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் தங்கக் கடத்தல் குறித்து
விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, சென்னை
சர்வதேச விமான நிலையத்தில், பல லட்சம் முதலீடு செய்து, முறைப்படி இந்திய விமான நிலைய
ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார்.
அந்த கடையின் 7 பணியாளர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில், அனைத்து
பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான, சிறப்பு அனுமதியுடன் பி சி ஏ எஸ் பாஸ்கள் வாங்கி
இருந்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து டிரான்சிட் பயணிகள் சிலர், கடத்திக் கொண்டு
வரும் தங்கத்தை, விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு,
சபீர் அலிக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்று விடுவார்கள்.
அப்போது சபீர் அலி, தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, அந்த
தங்கத்தை ஊழியர்களின் உள்ளாடைக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறுத்து வைத்து,
வெளியில் கொண்டு வந்து, கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக
கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில், சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்துள்ளது.
மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சபீர் அலி, விமானநிலையத்துக்குள்
கடை வைக்க ரூ.77 லட்சத்தை ஹவாலா மூலமாக பெற்று, பணத்தைக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இலங்கை பயணியை கையும் களவுமாக சுங்க அதிகாரிகள் பிடித்து,
விசாரணை நடத்தியபோது இது பற்றிய முழு தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை கடத்தல் பயணி, சென்னை விமான
நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர்
கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அது குறித்து தீவிரமாக விசாரித்தபோது, சென்னை விமான நிலையத்தில்,
கமர்சியல் பிரிவில், இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள, உயர் அதிகாரி ஒருவர், சபீர்
அலிக்கு உதவி செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து,
இதைப் போன்ற கடைகள் நடத்துவதற்கான ஒட்டுமொத்த உரிமத்தை, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு
கொடுத்துள்ளது. அந்த தனியார் நிறுவனத்தின் பணியாளர் பிரித்வீ என்பவர்தான், விமானநிலைய
ஆணைய இணை அதிகாரிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
பிரித்வீ பரிந்துரை செய்துள்ள மேலும் 2 கடையின் ஊழியர்களும் தங்கக்
கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளனர். இதையடுத்து இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும்
கடையை இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படும்,
சென்னை விமான நிலைய இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் வீட்டிலும்
சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அதோடு அவருடைய காஞ்சிபுரம்
வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது
மேலும், தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபீர் அலி, இலங்கை பயணி உள்ளிட்ட 9 பேர்களையும், நீதிமன்ற
அனுமதியுடன், காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்தும், அதோடு சபீர் அலி, கடந்த
இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கடையை தொடங்குவதற்கு முன்பு, என்ன செய்து கொண்டு இருந்தார்,
அவருடைய பின்னணி என்ன, அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்றெல்லாம் விசாரணை நடத்த
முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சபீர் அலிக்கு பரிந்துரை செய்த தனியார் நிறுவன ஊழியர்
பிரித்வீ, தமிழக பாஜவில் மாணவர் அணியில் பதவியில் இருந்து வந்துள்ளார். பிரித்வீயின்
டிவிட்டர் கணக்கை பிரதமர் மோடியே பின் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு
ஒன்றிய அமைச்சரிடம் பிரித்வீ பணியாற்றி வந்துள்ளார். தமிழக பாஜ மாநில தலைவர்கள் சிலரது
பெயரைச் சொல்லித்தான் பண வசூலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது
இந்திய அளவில் பல முக்கியத் தலைவர்களுடனும் பிரித்வீ நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்
என்று தெரியவந்துள்ளது.
சுங்கத்துறை விசாரணையில் பிரித்வீ மாட்டியுள்ள தகவல் தெரியவந்ததும்,
அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில்
கடந்த 15ம் தேதி அண்ணாமலைக்கும், அவருடைய வார் ரூம் ஆட்களுக்கும் தங்கக் கடத்தல் மற்றும்
மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக பாஜ சிந்தனையாளர் பிரிவு மாநில பார்வையாளர்
கல்யாணராமன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து
அண்ணாமலை நீக்கிவிட்டார்.
இந்த விவகாரங்கள் தற்போது பாஜவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தங்க கடத்தல் கும்பலில் சிக்கியுள்ள ஒருவர், அண்ணாமலையுடன் நெருக்கமாக இருப்பது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் என்னுடன் ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டார் என்பதாலே,
எனக்கு தொடர்புன்னு அர்த்தமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.
அதற்கு அ.தி.மு.க.வினர் ஒரு படத்தை வெளியிட்டு, ‘’இந்த புகைப்படம்
சென்னை விமான நிலையத்தில் நீங்கள் தங்கக்கடத்தல் ப்ரித்விராஜை தேஜஸ்வி சூர்யாவுக்கு
அறிமுகம் செய்தபொழுது பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படம். இது நடந்தது கடந்த ஆண்டு.
அது மட்டுமில்லை. ஒவ்வொரு முறை நீங்கள் விமான நிலையத்திற்கு செல்லும் பொழுதும் இந்த
பிரித்விராஜ் உங்களுடன் இருந்துள்ளார். அதற்கான நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் திருப்பதி கோவில்
சென்ற பொழுது அவர் தான் உங்களுடன் வந்துள்ளார். அவரை திருப்பதி தேவஸ்தானம் போர்டுக்கு
பரிந்துரை செய்ததே நீங்கள் தான். சரி கோவிலுக்கு உங்களுடன் அவர் வரவில்லை என்று ஏழுமலையான்
மீது சத்தியம் செய்து சொல்லத்தயாரா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
போகிற போக்கைப் பார்த்தால் விசாரணை வளையத்தில் அண்ணாமலையும் சிக்குவார்
என்றே தெரிகிறது. அதற்குள் அண்ணாமலை லண்டனுக்கு எஸ்கேப் ஆகிவிடாமல் இருந்தால் சரிதான்.