Share via:
அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு பின்னர் நாளை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் அண்ணாமலையை அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் அண்ணாமலை நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பா.ஜ.க.வின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதுகுறித்தும், யாருடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலை சந்திக்கலாம் என்பது குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோன்று வருகிற அக்டோபர் 3ம் தேதி நடைபெற உள்ள பா.ஜ.க. மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை என்ன பேச வேண்டும்? என்ன முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பது குறித்தும் நாளைய டெல்லி பயணத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா,. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் சந்திப்புக்கு பின்னர் தமிழக பா.ஜ.க.வில் எடுக்கப்படும் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை பா.ஜ.க.வுடன் இணைத்து வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தும் டெல்லி பயணத்தின் போது அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
