Share via:
வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை எங்கே நிற்கப் போகிறார் என்பது
பெரும் பரபரப்புப் பட்டிமன்றமாக இருந்துவந்தது. இப்போது அவர் எங்கேயும் நிற்கப் போவதில்லை
என்கிறார்கள். தேர்தலில் சீட்டு வாங்கித்தருகிறேன் என்று அண்ணாமலை வசூல் செய்தார் என்று
மேலிடத்துக்கு குற்றச்சாட்டு போனதே காரணம் என்கிறார்கள். இந்த காரணத்தாலே தேர்தல் பொறுப்புகளில்
இருந்தும் அண்ணாமலை விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.
ஆனாலும், அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதாவது தெருமுனைப் பேச்சுக்குப் போகும் அளவுக்கு இறங்கிவிட்டார் அண்ணாமலை. நேற்று கோவை
மாவட்டம் காளப்பட்டியில் அண்ணாமலை, ‘’இதுவரை தமிழகம் காணாத ஒரு மோசமான ஆட்சியை கடந்த
5 ஆண்டு காலத்தில் திமுக நமக்கு காட்டியிருக்கிறது. 2006-11 வரையிலான திமுக ஆட்சி இருண்ட
ஆட்சியாக இருந்தது. 2021 முதல் தற்போது வரையிலான திமுக ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருக்கிறது.
தேர்தல் எப்போது வரும் என மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை விரட்டியடிக்க
மக்கள் தயாராகிவிட்டார்கள்.
சமீபத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.
@Dhayanidhi_Maran அவர்கள், கோவை மக்களை இழிவுபடுத்திப் பேசினார். கொரோனா பெருந்தொற்றின்
போது, திமுகவிற்கு வாக்களிக்காத கோவை மக்களுக்கு குறைந்தளவு தடுப்பூசி வழங்கி திமுக
அரசு வஞ்சித்தது. திமுகவிற்கு வாக்களிக்காத மக்களை, திமுக அரசு நடத்தும் விதம் இதுவே.
கோவை பகுதியில் மட்டும், கடந்த 3 ஆண்டுகளில், 325 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு
காரணம், நூற்பாலைகளுக்கான 1 யூனிட் மின்சாரத்தை திமுக அரசு ரூ.9.25-க்கு வழங்குவது
தான். தொழில்வளம் நிறைந்துள்ள கோவையில் தொழிற்சாலைகளை வளர்க்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை.
2011 கோவை மக்கள் தொகையை கணக்கிட்டு கோவை மெட்ரோ திட்டத்திற்கு தவறான அறிக்கையைத் தயாரித்து
கொடுத்தால் மத்திய அரசு எப்படி ஒப்புதல் வழங்கும்? ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு கோவையை
வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார்…’’ என்று கூறினார்.
தனிக்கட்சி தொடங்கப்போகிறார், தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும்
என்றெல்லாம் சொல்லப்பட்ட அண்ணாமலை, தெருமுனைக் கூட்டம் அளவுக்கு இறங்கிவிட்டார் என்பதுதான்
வேதனை.
