Share via:
ஈரோடு கிழக்கு தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும்
என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான மனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.
இங்கு மீண்டும் காங்கிரஸ்
கட்சியே போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றாலும் முதல்வர் ஸ்டாலினை கலந்துபேசி முடிவு
அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவது
குறித்து வரும் 11ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்க்குப் பிறகு அறிவிக்க உள்ளது.
ஓர் ஆண்டு மட்டுமே பதவி என்பதால் தேர்தலை புறக்கணிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, இந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க. வேட்பாளரை
நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ள நிலையில், இங்கு அண்ணாமலையை வேட்பாளராக நிறுத்த வேண்டும்
என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். கொங்கு பெல்ட் வாக்குகள் கிடைக்கும்
என்பதுடன் தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியின்
மூலம் கண்டிப்பாக வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. அண்ணாமலை சட்டமன்றத்துக்குப் போனால்
அனல் பறக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், அ.தி.மு.க.
நேரடியாக ஆதரவு தரவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் போன்று மீண்டும் தோல்வியைத் தழுவ
நேரலாம் என்று அண்ணாமலை யோசிக்கிறார். அதேநேரம், மேலிடம் அழுத்தம் கொடுத்தால் நிற்பதற்குத்
தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இந்த தேர்தலில் தனது
கட்சி போட்டியிடாது என்றும் யாருக்கும் ஆதரவும் இல்லை என்று விஜய் அறிவித்துவிட்டார்.
அதேபோல், நாங்கள் போட்டியிடப் போகிறோம் என்று சீமான் அறிவித்து இருக்கிறார். அண்ணாமலைக்கு
அ.தி.மு.க. ஆதரவு கொடுத்து இருமுனைப் போட்டியாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கல்
தான்.