Share via:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை பா.ம.க. பயன்படுத்தி
வாக்குகள் வாங்குவதற்கு முயற்சி செய்வதும் அதற்கு அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி
தினகரன் ஆகியோர் வரவேற்பு கொடுத்திருக்கும் நிலையில், முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி
நேரடியாக, அண்ணாமலை வாயிலேயே வடை சுடுகிறார் என்று நேரடியாக அட்டாக் செய்திருப்பது
பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது.
கோவை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அண்ணாமலை தன்னை
அடையாளப்படுத்தவே கட்சி நடத்துகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டிருந்தால்
நான்காவது இடத்துக்குப் போயிருக்கும் என்று கூறியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
ஜனநாயகப்படி தேர்தல் நடக்கவில்லை என்ற காரணத்தாலே இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை
என்ற உண்மை தெரிந்தும் வேண்டுமென்றே பொய் பேசுகிறார் அண்ணாமலை.
அண்ணாமலை பொய் செய்தி மட்டுமே சொல்கிறார். அவர் வந்த பிறகு பா.ஜ.க.
வளர்ந்திருப்பது போன்று பொய்த்தோற்றம் காட்டிவருகிறார். உண்மையில் அவர் வந்த பிறகு
பா.ஜ.க. வாக்கு விகிதம் குறையவே செய்திருக்கிறது. மத்தியில் 300 தொகுதிகளில் வென்று
ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இப்போது குறைந்த தொகுதியில் வெற்றிபெற்று சிறுபான்மை அரசாக
இருப்பதற்கு அண்ணாமலையே காரணம்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்துக்கு 100 திட்டங்கள் உடனடியாக
செயல்படுத்தப்படும் என்று அண்ணாமலை உறுதி கொடுத்தார். இப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.
ஆகவே, திட்டங்களைக் கொண்டுவருவாரா அண்ணாமலை என்று மக்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்’’
என்று நேரடியாக அட்டாக் செய்திருக்கிறார்.
இது வரையிலும் ஜெயக்குமார் மற்றும் மாஜி அமைச்சர்கள் மூலம் அண்ணாமலையை
அட்டாக் செய்துவந்த எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக் செய்திருப்பதன் மூலம் அரசியல்
பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். பா.ம.க.வுக்கு இரட்டை இலை வாக்குகள் போய்விடக் கூடாது
என்பதற்காகவே இந்த நேரடி அட்டாக் என்கிறார்கள்.