Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அத்தனை தொகுதியிலும் டெபாசிட்
இழக்கும் என்று வீர வசனம் பேசிய அண்ணாமலை அவரது கோவை தொகுதியிலே படு மோசமாகத் தோல்வி
அடைந்திருக்கிறார். அரசியல் கணக்கு போடத் தெரியாத அண்ணாமலையை இப்போது பதவியை விட்டு
தூக்கிவிட்டு புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடி
தூக்கியிருக்கிறார்கள்.
அவர்களுடைய கணக்குப் படி, ‘தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் இருந்த
போது பாஜக கன்னியாகுமரி தொகுதியை வென்றிருந்தது. அடுத்து எல்.முருகன் பாஜகவிற்கு தலைவராக
இருந்த நேரத்தில் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்று கொடுத்தார். ஆனால், அடுத்துவந்த அண்ணாமலை
கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் செலவு செய்து ஒரே ஒரு வெற்றி கூட பெறவில்லை.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியை மதித்து அவருடன் கூட்டு சேர்ந்திருந்தால்
மிக எளிதாக தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கவும், பா.ஜ.க. தனித்து பெரும்பான்மை
பெற்றிருக்கவும் முடியும்.
இப்போது வாங்கியிருக்கும் வாக்குகளைப் பார்க்கும்போது, கடலூர்,
கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி,
ஆரணி, தர்மபுரி, ;தென்காசி, விழுப்புரம், சிதம்பரம், தென்சென்னை ஆகிய தொகுதிகளில் மிக
எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியும் பா.ஜ.க.
கூட்டணியும் இணைந்து தி.மு.க. கூட்டணியை விட மிக அதிக வாக்குகள் வாங்கியிருக்கின்றன.
தனித்து நின்று வாக்கு சதவிகிதம் கூடுதலாக வாங்குவதால் யாருக்கும்
எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் தமிழர் போன்று ஒவ்வொரு தேர்தலில் வாக்குகள் கூடுதலாக
வாங்குவது ஒருபோதும் வெற்றிக்குப் பயன்படாது என்று கூறியிருக்கிறார்கள்.
மோடி பிரதமராகப் பதவி ஏற்றதும் அண்ணாமலை தானாகவே ரிசைன் செய்துவிடுவார்
என்று சொல்லப்படுகிறது. ஆகவே, அடுத்த பா.ஜ.க. தலைவர் ரேஸ் ஆரம்பமாகிவிட்டது. இந்த ரேஸில்
தமிழிசை செளந்தர்ராஜன், வானதி சீனிவாசன், எல்.முருகன், நைனார் நாகேந்திரன் ஆகியோருடன்
புதிதாக வந்து சேர்ந்த சரத்குமாரும் களத்தில் இருக்கிறார்.
அடுத்த தேர்தலுக்குள் எக்கச்சக்க திருப்பங்கள் நிகழத்தான் போகிறது.