Share via:

அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் ஹோட்டலில்
புரோட்டா போடுவது, டீ ஆற்றுவது, பாட்டிகளை கட்டிப் பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள்
நடந்துவருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடியை
தோளில் வைத்து ஆடியது பெரும் பரபரப்பாகியுள்ளது. அண்ணாமலையின் பயணத்தில் தமிழகத்தில்
150 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாபெரும் மாநாடு போன்ற
மக்கள் வெள்ளத்தின் நடுவே, வெகு சிறப்பாக நடந்தேறியது. இங்குதான் காவடியாட்டம் போட்டு
பரபரப்பாக்கினார்.
இந்த பயணத்தில் பேசிய அண்ணாமலை, ’’தளி தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி
சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் மீது, கொலைவழக்குகள், கிரானைட் கொள்ளை வழக்கு என பல்வேறு
வழக்குகள் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் திராவிட விடுதலைக்
கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனி எனும் பழனிச்சாமி, தளி இராமச்சந்திரனின்
மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கியால் சுட்டும், தலையைத்
துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில்
கைது செய்யப்பட்டார்.
ராமச்சந்திரன் மீதான 100 கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை வழக்கு,
நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இப்பகுதி விவசாயிகளை
மிரட்டி நிலங்களைப் பறித்த குற்றவாளி. தளி ராமச்சந்திரனும், அவரது ஆட்களும் மக்களை
அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது. தனக்கு
எதிராக போட்டியிட்ட தனது கட்சி மாவட்டச் செயலாளர் நாகராஜ் ரெட்டியை இரண்டு முறை தளி
ராமச்சந்திரனின் ஆட்கள் கொலை வெறியுடன் தாக்கியதால் அவர் நிரந்தர உடல் ஊனமுற்ற நிலையில்
வாழ்ந்து வருகிறார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தளி ராமச்சந்திரன் மீதான
அனைத்து வழக்குகளிலும் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்க பாஜக அனைத்து நடவடிக்கையும்
எடுக்கும்.
திமுக தமிழகம் முழுவதுமே வாரிசு அரசியல் செய்து வருகிறது. எந்தத்
தகுதியுமே இல்லாமல், ஒரு குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே பதவிக்கு வருகிறார்கள்.
திமுகவின் அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் தங்கள் வாரிசுகளை முன்நிறுத்துகிறார்களே
தவிர, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை. இதனால், ஆட்சி நிர்வாகம் வெகுவாக
பாதிக்கப்பட்டு, ஊழலும், அராஜகமும் பெருகியிருக்கிறது. தமிழகத்தின் முழு நிர்வாகக்
கட்டமைப்பையும் திமுகவின் குடும்ப அரசியல் கெடுத்து விட்டது. ஆனால், முதலமைச்சருக்கு
மக்களைக் குறித்துக் கவலை இல்லை. தனது மகனுக்கு அடுத்த கட்டப் பதவி கொடுப்பதில்தான்
அவரது முழு கவனம் இருக்கிறது. தமிழக அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.
ஒரு அமைச்சர் புழல் சிறையில் இருக்கிறார். மற்ற அமைச்சர்கள், சிறை செல்லக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள்…’’ என்று பேசினார்.