Share via:
ஒருவழியாக பாதயாத்திரையை முடித்த கையோடு, புதிய கெட்டப்புக்கு
மாறியிருக்கும் அண்ணாமலை இப்போது போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் மேட்டரை மிகத் தீவிரமாக
எடுத்து அரசியல் செய்துவருகிறார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் ஊடுருவி
இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள் 30
கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு
இருக்கிறதா என்று விசாரணை நடந்துவருகிறது.
இந்த சம்பவத்தில் ஜாபர் சாதிக் நீண்ட நாட்களாக தொடர்பில் இருப்பதும்,
தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவருடனும் நெருக்கமாகப் பழகியதும் மிகப்பெரும்
சிக்கலைக் கொண்டுவருகிறது.
கடந்த 15-ம் தேதி மேற்கு டெல்லியில் போதைப் பொருட்கள் தயாரிக்க
பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு
ரூ.2,000 கோடி. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும்,
திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில்
பிப்ரவரி 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார்,
கடந்த 23ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து,
அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை
போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு
முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம்,
உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு
கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்குநிகராக போதை தரக்கூடியது
மெத்தாம்பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப்
பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50
கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை
பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில்
புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள்
நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார், அதோடு ஹவாலா குற்றச்சாட்டிலும்
சிக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு
தி.மு.க. மீது விமர்சனம் வைத்துவருகிறார். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள்,
அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு
போலீஸார் விவரங்களை சேகரித்து அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கூறியிருக்கிறார். இந்த நிலையில் அ.தி.மு.க.வினரும் போதை மாஃபியா தி.மு.க. என்ற ஹேஸ்டேக்கை
டிரெண்ட் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் மூன்று வருடங்களாக ஜாபர் இந்த குற்றச் செயல்களில்
ஈடுபடுகிறார் என்றால், இத்தனை ஆண்டு காலமும் மத்திய அரசு இதனை கண்டுபிடிக்காதது ஏன்,
தேர்தலுக்காக இந்த நாடகம் ஆடுகிறது என்று தி.மு.க.வினர் கொதிக்கிறார்கள்.